காச நோய்
என்புருக்கி நோய் அல்லது காச நோய் (Tuberculosis, டியூபர்க்குலோசிசு) என்பது மைக்கோபாக்டீரியா (mycobacteria) என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் மாந்தர்களுக்கு ஏற்படும் கடும் தொற்றுநோய். இதனால் நோயுற்றவர் இறக்கவும் நேரிடும். இந்நோய் முக்கியமாக மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோசிசு (Mycobacterium tuberculosis) என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது.
- மைக்கோபாக்டீரியம் போவிசு (Mycobacterium bovis),
- மைக்கோபாக்டீரியம் ஆப்பிரிக்கானம் (Mycobacterium africanum),
- மைக்கோபாக்டீரியம் கனெட்டி (Mycobacterium canetti),
- மைக்கோபாக்டீரியம் மைக்குரோட்டி (Mycobacterium microti) முதலான நுண்ணுயிரிகளாலும் தூண்டப்படலாம்.
காச நோயானது பொதுவாக மூச்சுத்தொகுதியில் நுரையீரலைத் தாக்கி நோயுண்டாக்கினாலும், இவை நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி (Lymphatic system), இரைப்பை-குடல் தொகுதி, எலும்புகள் மூட்டுகள், குருதிச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளிலும் நோயுண்டாக்க வல்லவை.
இந்நோய் பொதுவாக டி.பி (TB) எனக் குறிப்பிடப்படுகிறது. TB என்பது Tubercle bacillus (டியூபர்க்கில் பாசிலசு)அல்லது TUBERCULOSIS (டியூபர்க்குலோசிசு) என்பதன் சுருக்கமாகும். சில மருந்துகள் உதவியால் நோய்த் தொற்றும் வாய்ப்புள்ளவர்களுக்கு நோய் தொற்றி வராமல் தடுப்பதற்கும், நோய் வந்தவருக்கு சிகிச்சையளிக்கவும், நோயிலிருந்து மீளவும் வாய்ப்புக்கள் இருப்பினும், இந்நோயை முற்றாக வர இயலாமற் செய்வதற்கான வழிமுறைகளை இன்னமும் அறிவியலாளர்கள் கண்டு பிடிக்கவில்லை.
இந்த நோயானது இருமல், தும்மல், உமிழ்நீர் போன்றவற்றிலிருந்து காற்றில் பரவும் தன்மை கொண்டது. ஏராளமான மனிதர்களில் தொற்று ஏற்பட்டிருந்தாலும் அது ஒரு ‘மறைநிலையில்' அல்லது துஞ்சுநிலையில் (Latent TB) காணப்படும். அப்படி உள்ளவர்களில் பத்தில் ஒரு பங்கினர் பிந்திய நிலையில் நோய் அறிகுறிகளை வெளிக்காட்டி நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சையளிக்கப்படாவிடின் அதில் 50 % இற்கு மேலானோர் இறக்கின்றனர்.
நோயைக் கண்டு பிடிக்க நெஞ்சில் X-கதிர் படப்பிடிப்பு, தோலில் செய்யப்படும் டியூபர்க்குலின் (Tuberculin) பரிசோதனை, உடல் நீர்மங்களின் நுண்ணுயிர் வளர்ப்பு மெய்த்தேர்வு (பரிசோதனை) என்பன பயன்படுத்தப்படுகின்றன. இந்த நோயைக் குணப்படுத்த கூட்டாக பல்வேறு நுண்ணுயிர்கொல்லிகள் இணைத்து, நீண்ட காலத்துக்கு கொடுக்கிறார்கள். ஆனால் தற்போது பயன்பாட்டிலுள்ள அனைத்து நுண்ணுயிர் கொல்லிகளையும் எதிர்க்கும் திறனுள்ள பாக்டீரியா கிளைவகை உருவாகியிருப்பது (Multi Drug Resistance) மிகப் பெரும் சிக்கலாகக் காணப்படுகிறது. இதனால் புதிதாக உருவாகியிருக்கும் நுண்ணுயிர் வகைக்கு மக்கள் நோயெதிர்ப்பாற்றலை இழந்து வருவதால் நோயின் வலிமை (தீவிரம்) அதிகரித்து வருகிறது. உலக நாடுகளெங்கும் உள்ள பல அறிவியலாளர்கள் ஆய்வுகள் மூலம், இதற்கான தீர்வைக் கண்டு பிடிப்பதில் முனைப்பாக உள்ளனர். 'பி.சி.ஜி' (பா.கா.கு, BCG) எனப்படும் எதிர்ப்பூசி போட்டுக் கொள்வதும் பல நாடுகளில் நடை முறையிலுள்ளது.
உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்நோயால் தாக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 80 - 90 இலட்சம் மக்கள் இத்தொற்று நோய்க்கு உள்ளாவதாகவும் உலகத் தூய்நல (சுகாதார) நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நொடியிலும் புதிதாக ஒருவர் இந்நோய்த் தாக்கத்திற்குள்ளாவதாக அறியப்படுகிறது. நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகும் மனிதர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது . எய்ட்ஃசு நோயை உருவாக்கும் எச்.ஐ.வி என அழைக்கப்படும் மனித நோயெதிர்ப்புக்குறைபாட்டு வைரசின் (HIV) தாக்கத்திற்குள்ளான நோயாளிகளில் ஏற்படக்கூடிய முக்கியமான இரண்டாவது தொற்றாக (secondary infection) இந்த காசநோயே காணப்படுகிறது.
2005 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (World Health Organization - WHO) வெளியிட்ட அறிக்கையின்படி, 2003 ஆம் ஆண்டில் 88 இலட்சம் மக்கள் புதிதாக நோய்த் தொற்றுக்குட்பட்டதுடன், 17 இலட்சம் மக்கள் இந்நோயினால் இறந்திருக்கிறார்கள். இந்நோயினால், ஆப்பிரிக்க நாட்டிலேயே மிக அதிகமான இறப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றது. பரணிடப்பட்டது 2008-07-04 at the வந்தவழி இயந்திரம், [5] பரணிடப்பட்டது 2011-08-14 at the வந்தவழி இயந்திரம். வளர்ந்துவரும் நாடுகளில், 2004 ஆம் ஆண்டில், 1.46 கோடி தீவிர (நோய்முதிர்ந்த) நோயாளிகளும், 89 இலட்சம் புதிய நோயாளிகளும், 16 இலட்சம் இறப்புக்களும், அறியப்பட்ட. மேலும் நோயெதிர்ப்பு குறைபாட்டு நோய் (AIDS), உடலின் நோயெதிர்ப்பாற்றலை குறைக்கும் மருந்துகளின் பயன்பாடு போன்ற காரணங்களால், வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இந்நோய் பரவி வருகிறது. இந்நோயானது ஆசிய, ஆப்பிரிக்க நாட்டினரில் 80% உம், அமெரிக்காவில் 5-10% உம் காணப்படுகிறது.
தற்போது காசநோய்க்கான சிகிச்சைக்கான பகுப்பு முறையானது, நோயின் தொற்றுத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
வகுப்பு | வகை | விளக்கம் |
---|---|---|
0 | காச நோயை எதிர் கொள்ளாமை தொற்றுக்குட்படாமை |
நோயை எதிர் கொண்ட வரலாறு இல்லாமை டியூபர்க்குலின் தோற் பரிசோதனைக்கு எதிர் விளைவு |
1 | காச நோயை எதிர் கொண்டிருந்தமை தொற்று உறுதிப்படுத்தப்படாமை |
நோயை எதிர் கொண்டமைக்கான வரலாறு உள்ளமை டியூபர்க்குலின் தோற் பரிசோதனைக்கு எதிர் விளைவு |
2 | காச நோய்த் தொற்று நோயின்மை |
டியூபர்க்குலின் தோற் பரிசோதனைக்கு நேர் விளைவு பக்டீரியா சோதனையில் எதிர் விளைவு (செய்யப்பட்டிருந்தால்) காச நோயானது மருத்துவக் கணிப்பு நோக்கிலோ, பக்டீரிய சோதனை மூலமாகவோ, அல்லது கதிர் வீச்சு முறையினாலோ (X-கதிர்) உறுதிப்படுத்தாத நிலை |
3 | வைத்திய சோதனையில் செய்வினை கொண்டது | மை.டியூபர்குலோசிசு (M. tuberculosis) வளர்ந்திருத்தல் (செய்திருந்தால்) காச நோயானது வைத்திய நோக்கில், பக்டீரிய சோதனை மூலமாக, கதிர் வீச்சு முறையினால் (X-கதிர்) உறுதிப்படுத்திய நிலை |
4 | காசநோய் வைத்திய சோதனையில் செய்வினையற்றது |
காசநோய் வரலாற்றைக் கொண்டிருத்தல் அல்லது அசாதாரணமான, ஆனால் உறுதிச் சமநிலையுள்ள கதிரியக்கத் தோற்றப்பாடு டியூபர்க்குலின் தோற் பரிசோதனைக்கு நேர் விளைவு பக்டீரிய சோதனையில் எதிர் விளைவு (செய்திருந்தால்) அத்துடன் வைத்திய நோக்கிலோ, X-கதிர் பரிசோதனையிலோ உறுதிப் படுத்தாத நிலை |
5 | காச நோய்க்கான ஐயம் | நோய் நிறுவுதல் முற்றுப்பெறாத நிலை காச நோய் உள்ளதா, இல்லையா என்பது 3 மாதங்களில் உறுதி செய்யப்பட வேண்டும் |
நோயானது தீங்குதரத் தொடங்கும்பொழுது, நோயாளிகளில் 75% பேருக்கு நுரையீரல் காச நோயாக (பல்மனரி டிபி, Pulmonary TB) இருக்கும். அவற்றின் அறிகுறிகளாவன; நெஞ்சு நோவு, இருமலுடன் குருதி வெளிவரல், 3 கிழமைகளுக்கு மேலாக கடுமையான நீடித்த இருமல். குறிப்பிடத்தக்க அறிகுறிகளாவன; காய்ச்சல், தடிமன், இரவில் வியர்த்தல், பசியின்மை, உடல் எடை குறைதல், உடல் வெளிறியிருத்தல், மிக இலகுவாக அடிக்கடி உடற் சோர்வடையும் தன்மையைக் கொண்டிருத்தல்.
மீதம் இருக்கும் 25% நோயாளிகளில் இந்த நோயானது நுரையீரலிலிருந்து வேறு உடல் உறுப்புக்களுக்குப் பரவிச் செல்கிறது. இது நுரையீரலுக்கு வெளியான காச நோயென (Extra Pulmonary TB) அழைக்கப்படும்[8]. இவை பொதுவாக உடலில் எதிர்ப்புத் தன்மை குறைந்தவர்களிலும், குழந்தைகளிலும் ஏற்படும். இவ்வகை காச நோய் நரம்புத் தொகுதியைத் தாக்குகையில் (மூளை, தண்டுவடங்களின் சவ்வு உறையைத் தாக்குகையில்) மெனிஞ்சைட்டிசு (Meningitis) என்றும், நிணநீர்த் தொகுதியைத் தாக்குகையில் கழுத்துப் பகுதியில் சுக்ரோபுயூலா (scrofula) என்றும் கூறப்படுகின்றது. மேலும் பிளியூரா (pleura) எனப்படும் நுரையீரல் குழியின் இரட்டைச் சவ்வுப்படலம், இரைப்பை-குடல் தொகுதி, எலும்புகள், மூட்டுகள், குருதிச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளையும் தாக்கி நோயுண்டாக்க வல்லவை. எலும்பு, மூட்டுக்களைப் பாதிக்கையில் அது பாட்டின் நோய் (Pott's disease) என அறியப்படுகிறது.
நுண்கிழிவுகளாகக் காணப்படும் குருனைக் காசநோய் (Miliary tuberculosis) மிகவும் கடுமையான ஒரு நோய்த்தன்மை கொண்டதாகும். இந் நிலையில், தொற்றானது குருதித் தொகுதியினுள்ளும் சென்று, அந்நிலையில் தினை (millet, தினை) போன்ற தானியத்தின் தோற்றத்தில் சிறிய புண்கள் உருவாகிறது. அந்தப் புண்கள் X - கதிர் படத்தில் காணக்கூடியதாக இருக்கும்.
நுரையீரல் காசநோய், நுரையீரலுக்கு வெளியான காசநோய் இரண்டும் ஒரே நோயாளியில் தாக்கியிருக்கவும் கூடும்.
முதன்மையான நோய்க் காரணி Mycobacterium tuberculosis (MTB) என்னும் கோலுருவான (bacilli), ஒரு காற்றுவாழ் (aerobic) பக்டீரியாவாகும். இதில் 16-20 மணித்தியாலங்களுக்கு ஒரு முறையே உயிரணுப்பிரிவு நிகழ்வதால், ஏனைய பக்டீரியாக்களுடன் ஒப்பிடும்போது (பொதுவாக பக்டீரியா ஒரு மணித்தியாலத்திற்குள் ஒரு தடவை உயிரணுப்பிரிவடையும்), மிகவும் மெதுவான வளர்ச்சிவீதத்தைக் கொண்டிருக்கிறது. (E.coli என்னும் மிக விரைவான வளர்ச்சியுடைய பக்டீரியா 20 நிமிடத்திற்கொரு முறை உயிரணுப்பிரிவு அடைகின்றது. இந்த மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிசு (Mycobacterium tuberculosis) உயிரணு உயிரணுச்சுவரைக் கொண்டிருப்பினும், வெளி பொசுபோலிப்பிட் மென்சவ்வைக் கொண்டிராதமையால் கிராம் நேர்வகைப் (Gram positive) பிரிவில் வகைப்படுத்தப்படுகிறது. ஆனாலும் கிராம் நிறமூட்டுகையின்போது, இதன் உயிரணுச்சுவரில் உள்ள அதிகளவிலான லிப்பிட்டு, மைக்கோலிக் காடி (அமிலம்) (Mycoli acid) காரணமாக, மிக மென்மையாக நிறமூட்டப் பட்டோ, அல்லது நிறமூட்டப்படாமலோ காணப்படுகின்றன. இந்த மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிசு (Mycobacterium tuberculosis) பக்டீரியாவானது பலமற்ற நுண்ணுயிர்க்கொல்லிகளை எதிர்த்து, உலர் நிலையில் பல கிழமைகள் உயிருடன் வாழும் வல்லமை கொண்ட, கோலுருவான பாசிலசு (bacillus) வகையைச் சார்ந்தது ஆகும். இது, இயற்கையில், ஓர் ஏற்புதரும் உயிரினத்தின் உடலில் மட்டுமே வளரும் தன்மை கொண்டிருப்பினும், தகுந்த வளர்ப்பூடகத்தில் செயற்கையாக, பரிசோதனைக் குழாய்களில் வளர்க்கப்படக் கூடியவையாய் உள்ளன.
நோயாளிகளின் வாயிலிருந்து பெறப்படும் சளியில் செய்யப்படும் இழையவியல் நிறமூட்டுகையில் இருந்து, சாதாரண நுணுக்குக்காட்டி மூலம், அறிவியலாளர்களால் இந்த பக்டீரியாவை இனம்காண முடியும். பொதுவான கிராம் நிறமூட்டுகையின்போது, இவ்வகை பக்டீரியாக்கள் நிறமூட்டப்பட்டாலும், பின்னர் காடிக் கரைசல்களுடன் கையாளப்படும்போது, இந்த பக்டீரியாவானது நிறநீக்கத்துக்கு உட்படாமல், சில நிறங்களை தக்க வைத்துக் கொள்வதனால், இது காடியின் நிலை கொள்ளும் பாசிலசு (Acid Fast Bacillus - AFB) என்னும் பிரிவினுள் வகைப்படுத்தப்படுகிறது.[1][13]. இவ்வகை பக்டீரியாக்களை இனம்காண பொதுவாக பயன்படும் சோதனைமுறை சீயல்-நீல்சன் (Ziehl-Neelsen) நிறமூட்டுகை ஆகும்.
Mycobacterium tuberculosis (stained red) in tissue (blue).
இந்த சீயல்-நீல்சன் (Ziehl-Neelsen) நிறமூட்டுகையின்போது, நீலநிற பின்புலத்தில், பளிச்சென்று சிவப்பு நிறத்தில் இவ்வகை பக்டீரியாவின் உயிரணுக்கள் இனம் காணப்படும்.
ஔராமைன்-ரோடாமைன் (Auramine-rhodamine) நிறமூட்டுகை, மற்றும் தூண்டொளிர் (fluorescent) நுண்ணோக்கி மூலமாகவும் AFB ஐ இனம்காண முடியும். மேலும் இரு பகுதி, இரு படிமுறை AFB குளிர் நிறமூட்டுகை (two component, two step AFB cold staining method) முறையினாலும் இந்த பாக்டீரியா இனம் காணப்பட முடியும்.
M.tuberculosis complex ஆனது, காசநோயை உருவாக்கவல்ல, வேறு மூன்று மைக்கோபக்டீரியாக்களை உள்ளடக்கியுள்ளது. அவையாவன M. bovis, M. africanum, M. microti. இவற்றில் M. africanum அதிகளவு பரவியிருக்காவிட்டாலும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காசநோயை உருவாக்கும் முக்கிய நோய்க்காரணியாக உள்ளது. முன்னைய ஒரு கால கட்டத்தில் M. bovis காசநோய்க்கான பொதுவான ஒரு காரணியாக இருந்தவந்த போதிலும், பின்னர் கிருமிநீக்கிய பாலின் (pasteurized milk) அறிமுகத்தினால், வளர்ச்சியடைந்த நாடுகளில் இக்காரணியால் பொதுவான சுகாதார பிரச்சனைகள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. M. microti யானது பொதுவாக நோயெதிர்ப்பாற்றல் குறைந்த மனிதர்களிலேயே நோயை உண்டாக்குவது அறியப்பட்டிருக்கின்ற போதிலும், இந்நோய்க் காரணியின் பாதிப்பு குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதற்கான சாத்தியங்களும் உள்ளது.
நோயை உருவாக்கும் திறனுள்ள வேறு சில மைக்கோபக்டீரியா வகைகளும் உள்ளன. Mycobacterium leprae தொழுநோயை உருவாக்கும் வல்லமை கொண்டது. Mycobacterium avium, M. kansasii ஆகிய இரண்டும் காசநோயை உருவாக்காத மைக்கோபக்டீரியா (Non Tuberculosis Mycobacteria - NTB) வகையினில் அடங்கும். இவையிரண்டும் காச நோயையோ, அல்லது தொழுநோயையோ உருவாக்காவிட்டாலும், காச நோயை ஒத்த நுரையீரல் சம்பந்தமான சில நோய்களை உருவாக்க வல்லன.
மிகுதி அடுத்த வாரம்...