அறத்துப்பால் -இல்லறவியல் - ஒப்புரவறிதல்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு
பரிமேலழகர் உரை
மாரிமாட்டு உலகு என் ஆற்றும்-தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன; கடப்பாடு கைம்மாறு வேண்டா-ஆகலான், அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல.
விளக்கம்:
('என் ஆற்றும்?' என்ற வினா, 'யாதும் ஆற்றா' என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும். தவிரும் தன்மைய அல்ல என்பது 'கடப்பாடு' என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாரது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.)
Translation
Duty demands no recompense; to clouds of heaven,
By men on earth, what answering gift is given?
Explanation
Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?