காச நோய்

சென்ற வார தொடர்ச்சி....

தொற்றும் பரவலும்

சாதாரண தடிமனைப் போன்றே காசநோயும் காற்றினால் தொற்றுதலை ஏற்படுத்தி, பரவுகின்றது. நுரையீரல் காசநோய்த் தொற்றுக்குட்பட்ட ஒருவர் இருமும்போது, தும்மும்போது, பேசும்போது அல்லது துப்பும்போது வெளியேற்றும் 05-5 µm விட்டமுள்ள காற்றுத் துளிகள் காசநோய்த் தொற்றை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. ஒரு தனியான தும்மலின்போது நோயை உருவாக்கும் திறன்கொண்ட 40,000 துளிகள்வரை வெளியேறும் வாய்ப்பு உள்ளது. தொற்றை ஏற்படுத்த தேவையான நோய்க்காரணியின் அளவு மிகச் சிறியதாக இருப்பதால், ஒரு தனி காற்றுத் துளியே வேறு ஒருவரில் ஒரு புதிய தொற்றை ஏற்படுத்த முடியும்.

நோயுள்ள ஒருவருடன் தொடர்ந்த, அடிக்கடியான, அதிகமான தொடர்பில் இருப்பவருக்கு இந்நோய் உருவாவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும். நோயுள்ள, ஆனால் சிகிச்சைக்குட்படாத நபர் ஒருவர், வருடமொன்றுக்கு மேலும் 10-15 பேர்வரை தொற்றுக்குட்பட்த்துவதற்கான சாத்தியம் உள்ளது. காசநோய் அதிகமிருக்கும் இடத்தில் வசிப்பவர்கள், சரியான முறையில் தொற்றுநீக்கம் செய்யப்படாத ஊசிகளை போட்டுக் கொள்பவர்கள், தொற்றுக்குட்பட்டவருடன் தொடர்பில் இருக்கும் குழந்தைகள், மனித உடலின் நோயெதிர்ப்பாற்றலை குறைக்கும் தன்மை கொண்ட மருந்துகளை உட்கொள்பவர்கள், எய்ட்சு நோய்த் தாக்கத்திற்குட்பட்ட நோயாளிகள், மற்றும் காசநோய் நோயாளிகளுக்கு உதவும், மருத்துவ உதவிகளைச் செய்யும் பணியாளர்கள் என்போர் இந்நோய்த் தாக்கத்திற்குட்படுவதற்கான நிகழ்தகவு மிகவும் அதிகமாக இருக்கும்.

நோய்க்காரணியினால் தொற்றுக்குட்பட்ட பலரில், நோயானது வெளித்திரியாமல் ஒரு மறைநிலையில் (Latent TB) காணப்படும். இப்படி நோயானது மறைநிலையில் காணப்படும் ஒருவரால் புதிய தொற்று ஏற்படமாட்டாது. நோயானது செயல்நிலையிலுள்ள (active TB) ஒருவரிலிருந்து மட்டுமே நோய்த் தொற்று ஏற்படும் சாத்தியமுள்ளது. நோய்த்தொற்று ஏற்படுவதற்கான நிகழ்தகவானது நோய்க்காவியாக (carrier) செயற்படும் ஒருவரினால் வெளியேற்றப்படும் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல நீர்த் துளிகளின் எண்ணிக்கை, அவர் இருக்கும் இடத்தில் காற்றோட்டத்தின் தன்மை, நோய்க்காரணியை எதிர்கொள்ளும் நேரத்தின் அளவு, M.tuberculosis வகையின் நோயேற்படுத்தும் தன்மையின் அளவு (virulence) போன்ற காரணிகளில் தங்கியிருக்கும். இதனால் தொற்றானது தொடராக ஏற்படுவதைத் தவிர்க்க, நோய் செயல்நிலையில் உள்ளவரை உடனடியாக தனிமைப்படுத்தி, காசநோய்க்கெதிரான சிகிச்சையை தாமதிக்காமல் மேற்கொள்வதுமேயாகும். அப்படி சிகிச்சை செய்யப்படுமிடத்து, இரண்டு கிழமைகளில் அவர் பொதுவாக தொற்றை ஏற்படுத்த முடியாத நிலைக்கு செல்வார்.

புதிதாக நோய்த்தொற்றுக்கு உள்ளாகி நோயின் செயற்படு நிலையில் உள்ள ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கு அவருக்கு தொற்று ஏற்பட்ட நேரத்திலிருந்து 3- 4 கிழமைகள் எடுக்கும். காசநோய்த் தொற்றுள்ள இறைச்சியை உண்பதனாலும் இந்நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. Mycobacterium bovis ஆனது கால்நடைகளில் காசநோயை உருவாக்கும் திறனுள்ளது.

நோயுருவாக்கும் தன்மை.

M.tuberculosis இனால் தாக்கத்துக்கு உட்படுவோரில் 90% ஆனவர்கள் அறிகுறிகளற்ற, நோயின் மறைநிலையையே (Latent TB Infection - LTBI) கொண்டிருப்பார்கள். இப்படி மறைநிலையில் இருப்போரில் 10% ஆனவர்கள் மட்டுமே பிந்திய தமது வாழ்க்கைக் காலத்தில், செயற்பாடுள்ள நோயை பெறுகின்றனர். ஆனாலும், தகுந்த சிகிச்சை அளிக்கப்படாதவிடத்து, நோயைப்பெற்ற நோயாளர்களில் 50% க்கும் அதிகமானோர் இறக்கின்றனர்.

நோய்க் கண்டுபிடிப்பு.

Mycobacterium tuberculosis (stained red) in sputum

நோய்க்கான அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளில் நடத்தப்படும் மருத்துவ சோதனைகளுக்காகப் பெறப்படும் மாதிரிகளில் இருந்து (உமிழ்நீர், சீழ்) நோய்க்காரணி நிச்சயமாக அறிந்து கொள்ளப்படும்போது, நோயானது கண்டு பிடிக்கப்படும். இது சாத்தியமில்லாமல் போகுமிடத்து, X- கதிர் படப்பிடிப்பு மூலமும், அத்துடன், அல்லது டியூபெர்குலின் தோல் சோதனை மூலமும் நோயானது உறுதிப்படுத்தப்படும். நோய்க்காரணியின் மிக மெதுவான வளர்ச்சி வேகத்தினால் இந்நோயை கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. குருதி, அல்லது உமிழ்நீர் மாதிரிகளை, தகுந்த வளர்ப்பூடகத்தில் சோதனைச்சாலையில் வளர்த்தெடுக்க 4 - 12 கிழமைகள் பிடிக்கின்றது. காசநோய் பற்றிய ஒரு முழுமையான மருத்துவ கணிப்பீட்டிற்கு மருத்துவ வரலாறு, நேரடி உடல் சோதனைகள் (Physical examination), நெஞ்சின் X-கதிர் படம், நுண்ணுயிர்களின் பூச்சு (microbial smear), நுண்ணுயிர் வளர்ப்பு (microbial culture) என்பன தேவையாகின்றன. அத்துடன் டியூபெர்குலின் சோதனையும், இரத்த நிணநீர் சோதனை (serological test) போன்றனவும் செய்யப்படலாம். டியூபெர்குலின் சோதனை முடிவுகளை விளக்குவதானது, ஏற்கனவே குறிப்பிட்ட நபர் காசநோய்த் தடுப்பு (BCG vaccine) செய்துள்ளாரா, அவர் நோயுள்ள பலருடன் தொடர்பில் இருந்தாரா போன்ற காரணிகளில் தங்கியிருக்கும். அத்துடன் இந்த சோதனை முறையானது வேறு சில நோயுள்ளவர்கள், சத்தூட்டம் குறைவானவர்களில் தவறான முடிவுகளையும் தரக் கூடியதாக இருக்கிறது.

காசநோய் தடுப்பு.

உலக சுகாதார அமைப்பானது இநோயின் தீவிரத்தை முன்னிட்டு, 1993 ஆம் ஆண்டில், உலகளாவிய காசநோயை கட்டுப்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுத்தது. அதன் நோக்கம் ஆண்டுகள் 2006 - 2015 இற்கிடையில் இந்நோயினால் நிகழக் கூடிய 14 மில்லியன் உயிர் இழப்புக்களை தடுப்பதாகும். M.tuberculosis வகையினால் நோய்த் தொற்றுக்கு உட்படக்கூடிய இனம் மனித இனமாக மட்டுமே இருப்பதனால், வீரியமுள்ள ஒரு தடுப்பு மருந்தின் உதவியுடன் இந்த நோயை முழுமையாக கட்டுப்பாட்டினுள் கொண்டுவருதல் சாத்தியம் என்றே நம்பப்படுகிறது. காசநோயை ஏற்படுத்தாத வேறு மைக்கோபக்டீரிய இனங்கள் அதிகமாக உள்ள வெப்ப மண்டல நாடுகளில் இயற்கையாகவே காசநோய்க்கெதிரான ஒருவகை தடுக்கும் தன்மை நிலவுகிறது. காசநோய்த் தடுப்பு இரு வழிகளில் நடை முறைப்படுத்தப்படலாம்.

நோயை கண்டுபிடித்தலும், குணப்படுத்தலும்.

நோய் அதிகம் ஏற்படும் நிகழ்தவுள்ளவர்களை சோதனைக்குட்படுத்தி, நோயுள்ளவர்களை கண்டுபிடித்து, அவர்களை தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சையை உடனடியாக ஆரம்பித்து, அவர்களை குணப்படுத்துதல். இதன் மூல நோயானது மேலும் பரவுவதை தடுக்கலாம்.

நோய்த் தடுப்பு மருந்தின் பயன்பாடு.

1921 ஆம் ஆண்டில் பாசில்லசு கால்மெட்-குவெரின் (பா.கா.கு) (Bacillus Calmette-Guerin (BCG)) தடுப்பூசியானது மனிதர்களில் காசநோயைத் தடுக்கும் நோக்குடன் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்தத் தடுப்பூசி மைக்கோபாக்டீரியம் போவிசு (Mycobacterium bovis) நுண்ணுயிரை வலுவிழக்கச்செய்யும் மாற்றங்களுக்கு உட்படுத்தி தயாரிக்கப்பட்டது. செயற்கையான வளர்ப்பூடகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் வளர்த்ததில், மனிதர்களில் நோயை உருவாக்கும் தன்மையை இந்த நுண்ணுயிர் இழந்திருக்கும். இந்த தடுப்பூசியானது குழந்தைகளிலேயே உரிய தொழிற்பாட்டை காட்டுகிறது. பெரியவர்களான பின்னர் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்பட்டால், அது சரியான முறையில் தொழிற்படுவதில்லை.

மிகுதி அடுத்த வாரம்...