தொல்காப்பியம்

தொல்காப்பியம் (ஆங்கில மொழி: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும்.

தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின.

தொல்காப்பியர் காலம்

தொல்காப்பிய நூலுக்கு சிறப்புப் பாயிரம் இயற்றியவர் பனம்பாரனார். இவர் தொல்காப்பியர் உடன் பயின்றவர். இது பாணினி எழுதிய வடமொழி இலக்கண நூலுக்கு சமகாலத்து நூல்கள். தொல்காப்பியர் காலத்தில் தமிழில் இருந்த 'முந்துநூல்' (அகத்தியமும்) கண்டிருந்தார். தோற்றம் என்ற தலைப்பில் சான்றுடன் கூடிய தொல்காப்பியர் காலம் இணைக்கப்பட்டுள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொல்காப்பியர் ஆண்டினை பொ.ஊ.மு. 711 என்று பொருத்தியது.

தொல்காப்பியம் – பெயர் விளக்கம்

தொல்காப்பியம் எழுதப்பட்ட ஓலைச்சுவடி

தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம், தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் என்னும் இருவேறு கருத்துகள் அறிஞர்களிடையே நிலவி வருகின்றன.தொல்காப்பியம் என்ற சொல் நூலைக் குறிக்கும் போது ஒரு சொல் நீர்மைத்து.பொருளை விளக்கும் போது அதைத் தொல்+காப்பு+இயம் என்று முச்சொற்களாகப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.பழமையைத், தொன்மையைக் காத்து இயம்புவது என்று பொருள் பெறும்.தமிழரின் தொன்மையை பழமையைக் காத்து இயம்பும் நூல்.தொன்மை + காப்பியம் (தொன்மைகளை காத்து இயம்புதல்)= தொல்காப்பியம்.(பண்புத்தொகை): மிகவும் தொன்மை(பழமை)யான காப்பிய நூல் என்பதாலும் இது "தொல்காப்பியம்" என்று அழைக்கப்படுகின்றது.

தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம்

தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான 'வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் 'தொல்காப்பியம்' என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். (2-3-31) இது தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.காப்பியக்குடியில் ஆசிரியர் தொல்காப்பியர் தோன்றினாலும்,பழமையைக் காத்து இயம்புவதற்காகப் புனைபெயராகத்தான் தமக்குத் "தொல்காப்பியன்" எனப்பெயர் வைத்துக்கொண்டார்.அதனால்தான் சிறப்புப் பாயிரத்தில் 'தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி'எனக் குறிப்பிடுகிறார்.தொல்காப்பியன் எனத் தன் பெயரைத் தோற்றுவித்துக் கொண்டு என்பது இதன் பொருள் ஆகும்.

அகத்தியர் செய்தது அகத்தியம். பன்னிருவர் செய்தது பன்னிரு படலம்.ஐந்திரன் செய்தது ஐந்திரம். காக்கை பாடினியார் செய்தது காக்கைபாடினியம். பல்காப்பியனார் செய்தது பல்காப்பியம். திருமூலர் செய்தது திருமூலம். இப்படித் தொல்காப்பியத்துக்கு முந்திய இலக்கண நூலும் தொல்காப்பியத்தை முதல்-நூலாகக் கொண்ட தமிழின் பழமையான இலக்கண நூல்களில் பலவும் பிறவும் ஆசிரியராலேயே பெயர் பெற்றுள்ளன. இந்த வகையில் கருத்தா இன்றி காரியமில்லை அதனால் தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் எனக் கொள்வதே முறைமை.

கபிலர், தொல்கபிலர், பரணர், வன்பரணர் என வேறுபடுத்தப்படும் புலவர்களை நாம் அறிவோம். அதுபோலக் காப்பியனார் என்னும் பெயரில் தொல்காப்பியனார், பல்காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இருந்துவந்ததை வரலாறு காட்டுகிறது.

தொல்காப்பியப் பாயிரம் “புலம் தொகுத்தோன் … ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமையோன்” என்று கூறுகிறது. இதில் தொல்காப்பியன் புலம்(=இலக்கணம்) தொகுத்தான் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவற்றை விடுத்துத் தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனக் கூறுவோர் வரலாற்றை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர்

இயம்புவது "இயம்" ஆகும். இயத்துக்குக் காப்புத் (காவல்) தருவது "காப்பியம்". தொன்மையான காப்பியம் ஆதலால் இது தொல்காப்பியம் ஆனது.

தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனப்பட்டார். நன்னூல் செய்த பவணந்தி முனிவரை நாம் நன்னூலார் என வழங்குவது போன்றதே இது.

தோற்றம்

தொல்காப்பியப் பாயிரம் இவரை: "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறைந்த படிமையோன்" என்று குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் 'புலம்' தொகுத்தார் என்றும் தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்றும் புலன் என்றும் நாம் அறிவுக்கு அடிப்படையாக அமைந்துள்ள நிலைகளங்களைக் குறிப்பிடுகிறோம். அது போல மொழிக்கு அடிப்படையாக அமைந்துள்ள எழுத்து முதலான களங்களைக் காட்டுவது புலம் ஆகும். ஆகவே தொல்காப்பியர் புலம் தொகுத்தார் ஆனார். தொல்காப்பியர் பற்றி வேறு தனிப்பட்ட தகவல்கள் அதிகம் காணப்படவில்லை. தொல்காப்பிய ஆசிரியர் சமணர் என்று சிலர் குறிப்பிட்டாலும், வேறு சிலர் இது பலரால் பல்வேறு காலங்களில் எழுதப்பெற்ற நூல் என்றே நம்புகின்றனர்.

தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கணிப்பு ஏதும் இல்லை. பல்வேறு காலகட்டங்களில் பல ஆய்வாளர்கள் வெவ்வேறு விதங்களில் இதன் காலத்தைக் கணிக்க முயன்றுள்ளார்கள்.

பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் பொ.ஊ.மு. 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்களால் இஃது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் பொ.ஊ.மு. 700-ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை பொ.ஊ.மு. 500-இக்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய ச. வையாபுரிப்பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி பொ.ஊ. 3-ஆம் நூற்றாண்டு என்றனர். தொல்காப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்போரின் கருத்தோ, பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்று பொ.ஊ. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் எழுதப்பெற்றது என்பதாகும். ஆயினும் மா.இராச மாணிக்கனார் தன் கால ஆராய்ச்சி நூலில் மணி மேகலை எழுதப்பட்ட காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு என்று பல்வேறு சான்றுகளுடன் எசு. வையாபுரி பிள்ளையின் கருத்துகளை மறுத்தும், மா. இராச மாணிக்கனார் தொல்காப்பியர் காலம் பொ.ஊ.மு. 4-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு என்றும் உறுதியாக கூறுகிறார்.

தொல்காப்பியர் காலம்

சங்க காலப் புலவர் மாமூலனாரின் காலம் பற்றிய தவறான கணிப்பே கடைச்சங்க காலம் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது. மாமூலனார் பொ.ஊ.மு. 4-ஆம் நூற்றாண்டில் மகதத்தை ஆண்ட நந்தர்கள் பற்றியும் பிறகு ஆண்ட மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு பற்றியும் கூறியுள்ளார்.கள்ளில் ஆத்தி --ரையனார், ஊன்பொதி பசுங்குடையார் மேலும் 3 புலவர்கள் இப்போரினை தம் இலக்கியங்களில் பதிவு செய்து போரில் வென்றவன் கரிகாலனின் தந்தை இளஞ்சேட் செண்ணி என்கின்றனர். இதன் மூலம் திருவள்ளுவர் போன்றோரின் காலம் பொ.ஊ.மு. 5-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனத் தெரிகிறது. இதனால் தொல்காப்பியரின் காலம் பொ.ஊ.மு. 10-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனத் தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. மேலும் சங்க காலப் புலவர் கபிலர், அரசன் இருங்கோவேள் பற்றிக் கூறுகையில் அவனுடைய முன்னோர்கள் 49 தலைமுறையாகத் துவரை (துவாரகை) மாநகரை ஆண்டு வந்ததாகவும் அவர்களில் முன்னோன் ஒருவன் கழாத்தலை புலவரை இழிவு படுத்தியதன் காரணமாகவே இருபெரு மாநகரங்கள் (துவரை, வேட்துவாரகை) அழிவடைந்ததாகவும் கூறுகிறார். மாமூலனார் காலத்தின் மூலம் கபிலர் காலம் பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் பொ.ஊ.மு. 280-290 இடைப்பட்ட காலமாகும். ஒரு தலைமுறைக்கு 27 எனக் கொள்ள, 49×27=1323 ஆக 265+1323=1588 பொ.ஊ.மு. 16-ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முற்பட்ட விடயங்களைப் பற்றியும் மேலும் அக்காலத்தில் கழாத்தலையார் என்ற புலவர் வாழ்ந்தது பற்றியும் கபிலர் கூறுகிறார். இதன் மூலம் தொல்காப்பியரின் காலம் பொ.ஊ.மு. 20-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனத் தாராளமாகக் கூறலாம். கபிலர் காலத்திலும் கழாத்தலை என்ற புலவர் வாழந்ததாகவும் அப்புலவரால் பாடப்பட்ட அரசர்களின் பெயர்கள் மூலம் தெரியவருகிறது. வரலாற்றாசிரியர்கள் பொ.ஊ.மு. 1500-ஆம் ஆண்டு வாக்கில் துவாரகை கடலாள் கொள்ளப்பட்டதாகக் கூறுவது கபிலரின் பாடலை 100 சதவீதம் உறுதிபடுத்தும் விதமாக உள்ளது. இதன் மூலம் கபிலரின் காலம் பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டு என்பதும் நக்கீரர் (பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டு-கபிலரை விட ஒரு தலைமுறை இளயவர்) என்பவரின் கூற்றின் மூலம் தொல்காப்பியர் இடைச்சங்கத்தில் (பொ.ஊ.மு. 5770-பொ.ஊ.மு. 2070) பிறந்தவர். கபிலர் பாடல் மூலம் தொல்காப்பியர் காலம் பொ.ஊ.மு. 21-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. அதாவது இடைச்சங்கத்தில் பிறந்தவர் எனத் துள்ளியமாகத் தெரிகிறது.காரணம் நக்கீரர், தொல்காப்பியரை இடைச்சங்கத்தில் பிறந்து வாழ்ந்து இறந்ததாகவே குறிப்பிடுகிறார்.இடைச் சங்கம் பொ.ஊ.மு. 21-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பதால் தொல்காப்பியர் பொ.ஊ.மு. 2100-இக்கும் முன்பே வாழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.