மணிமேகலை
பௌத்தக் காப்பியம்
மணிமேகலை, குறிக்கோளை வெளிப்படையாகக் காட்டிக் கொள்கையைப் பரப்ப எழுதப் பெற்ற காப்பியம் ஆகும். ஆதலால் காப்பிய இலக்கணத்திற்கோ இலக்கியச் சுவைக்கோ முதன்மை தராமல் பௌத்த சமயக் கருத்துகளை விளக்குவதிலே முன்னிலை வகிக்கின்றது. இதனால் பௌத்தக் காப்பியம் என்று கூறினால் மிகையாகாது. மாதவியின் மகளான மணிமேகலை உலக இன்ப நாட்டத்தினை அறவே வெறுத்துப் பௌத்த மதத் துறவி (பிக்குணி)யாகித் தன் பவத்திறம் அறுக என நோற்றுச் சிறப்புப் பெற்றதனைச் செந்தமிழ் நலம் சிறக்கச் சாத்தனார் பாடியுள்ளார்.
சமுதாயச் சீர்திருத்தக் காப்பியம்
பௌத்த மதக் கோட்பாடுகள், ஒழுக்க நெறி, அரச நெறி, பசி போக்கும் அற மாண்பு இவற்றுடன், சிறைக் கோட்டங்களை அறக்கோட்டமாக மாற்றி அமைத்தல், கள்ளுண்ணாமை, பரத்தைமையை ஒழித்தல் போன்ற சீர்திருத்தக் கருத்துகளையும் சமுதாய மேம்பாட்டையும் வலியுறுத்திக் கூறுகின்ற நூலாக மணிமேகலை விளங்குகிறது. இத்தகு சீர்மையில் மணிமேகலையைச் சமுதாயச் சீர்திருத்தக் காப்பியம் என்பது சாலப் பொருந்தும்.
• மூன்று கருத்துகள்
இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்னும் மூன்று கருத்துகளையும் இக்காப்பியம் அழுத்தமாகக் கூறுகின்றது.
• காப்பியப் பெருமை
ஐம்பெருங் காப்பிய நூல்களையும் தமிழன்னையின் ஐந்து அணிகலன்களாக ஆன்றோர்கள் கற்பித்துள்ளனர். அவற்றுள் இம்மணிமேகலை மேகலை என்னும் இடை அணி ஆகும் பெருமையுடையது.
விழா அறை காதை
மணிமேகலை என்னும் காப்பியத்தில் முப்பது காதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் முதல் காதையாக விளங்குவது விழாவறை காதையாகும். இக்காதை, நிலைமண்டில ஆசிரியப்பா யாப்பினால் (72 அடிகள்) அமைந்தது. பூம்புகார் நகரில் இந்திர விழா நடப்பதனை அறிவித்தல் என்னும் செய்தியினை விளக்குகின்றது.
கதைச் சுருக்கம்
பண்டைக் காலத்தில், புகார் நகரத்தினை வளமுடைய நகராக ஆக்குவதற்கு அகத்தியர் நினைத்தார். அதற்காகத் தேவர் தலைவனாகிய இந்திரனுக்கு இருபத்தெட்டு நாட்கள் விழா எடுக்குமாறு, சோழ நாட்டு அரசனாகிய தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியனுக்குக் கூறினார். அரசனும் அதற்கிசைந்து அவ்விழாவைச் சிறப்புற நடத்தினான். இவ்விழாக் காலத்தில் தேவரும் புகார் நகருக்கு வந்து தங்குவர். இந்திர விழா எடுக்கத் தவறினால் நகருக்குத் துன்பம் ஏற்படும் என்று சமயவாதிகள் கருதி, விழா எடுக்க முடிவு செய்தனர். இச்செய்தியை வள்ளுவன் முரசு அறைந்து தெரிவித்தான்: செய்தியைக் கூறத் தொடங்கும் முன் நாடு, மழை, அரசனது செங்கோல் ஆகியவை நிலவுலகில் சிறக்க வேண்டும் என்று வாழ்த்துக் கூறினான்.
"புகார் நகர மக்களே! நம் நகரை வளமும் பொலிவும் உள்ள நகராக அழகுபடுத்தி விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள்; இறைவனுக்கும், ஊரைக் காக்கும் தெய்வங்களுக்கும் உரிய வழிபாடு செய்து தீங்கின்றி நலமே பெற்று வாழ்க; சமயச் சான்றோர்களே, மக்கள் மெய்ம்மொழிகளைக் கேட்டுப் பயனடையவும் வெவ்வேறு சமயங்களின் சார்பான கருத்துகளை வெளியிடவும் பட்டி மண்டபத்தில் உரை நிகழ்த்துங்கள்; சான்றோர் உரை கேட்ட பயனால் எப்போதும் சினமும் பகையும் இன்றி வாழுங்கள்”. இவ்வாறு செய்தி வள்ளுவன் முரசு முழங்கி அறிவித்தான். மேலும் நாட்டில் பசி, பிணி, பகை இல்லாமல் மழையும் வளமும் நிறையட்டும் என்று வாழ்த்தி, நகரின் பல பகுதிகளில் விழா பற்றிய செய்தியினைக் கூறி முடித்தான்.
கதை மாந்தர்கள்
விழாவறை காதை, கதை நிகழ்ச்சியில் இடம்பெறும் கதை மாந்தர்கள் அகத்தியர், தொடித்தோட் செம்பியன், இந்திரன், தேவர்கள், முரசறையும் வள்ளுவன் மற்றும் இந்திரவிழா எடுக்க அரசவையில் கூடியவர்கள், சமயக் கணக்கர்கள், சோதிடர், பன்மொழி பேசும் வேற்று நாட்டினர், ஐம்பெருங் குழுவினர், எண்பேராயத்தினர் ஆவர். இவர்கள் அனைவரும் கிளைக்கதை மாந்தர்கள்தாம். மணிமேகலைக் காப்பியக் கதையின் மாந்தர்கள் அல்லர்.
கதை அமைப்பு
இந்திர விழா நடைபெறும் பொருட்டு வள்ளுவன் முரசறைந்து, புகார் நகருக்குச் செய்தி அறிவித்தான். இந்நிகழ்ச்சி, மக்களுக்கு விழாச் செய்தி தெரிவித்தல் என்னும் நிலையில் அமைந்துள்ளது.