வண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம்
நாச்சிமார் கோவில் என்று பொதுவாக அழைக்கப்படும் வண்ணை காமாட்சி அம்மன் ஆலயம் அல்லது வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாநகரின் வடக்கே, வண்ணார்பண்ணை என்ற ஊரில் காங்கேசன்துறை வீதியும் யாழ் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வீதியாகிய இராமநாதன் வீதியும் இணைகின்ற இடத்திலே அமைந்திருகின்றது.
வண்ணை காமாட்சி அம்மன் ஆலயம் | |
---|---|
வண்ணை காமாட்சி அம்மன் ஆலயம் இலங்கையில் அமைவிடம் |
|
ஆள்கூறுகள்: | 9°41′0″N 80°1′0″E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | நாச்சிமார் கோவில் |
பெயர்: | வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | வடக்கு |
மாவட்டம்: | யாழ்ப்பாணம் |
அமைவு: | வண்ணார்பண்ணை |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அம்பிகை |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக்கட்டிடக்கலை |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1870 |
ஆரம்ப காலத்தில் மருத மரத்தடியில் ஆரம்பித்த தேவதை வழிபாடு, பெருவளர்ச்சியடைந்து, நாளடைவில் ஆகம வழிபாட்டைக் கொண்ட கோயிலாக மாற்றமடைந்து உள்ளது. இந்த ஆலயம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே “நாச்சிமார் கோவில்” என சிறப்பாக அழைக்கப்பட்டது.
ஆலய வரலாறு.
நாச்சிமார் கோவில் கி.பி 1870 ம் ஆண்டு, விஸ்வப்பிரம்மகுல சிற்பியாகிய கந்தர் என்பவரால் கல்லினால் கட்டப்பட்டதாக 1898 இல் யாழ்ப்பாண அரச அதிபரினால் வெளியிடப்பட்ட ஆலயங்கள் பற்றிய ஒரு அரசாங்கக் குறிப்பேட்டிலே காணப்படுகிறது. அத்துடன் அங்கு ஆண்டுதோறும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றன என்றும், இக்கோயில் விஸ்வப்பிரம்ம குலத்தவர்கள் வசம் காணப்பட்டதென்றும் பதிவேட்டுக் குறிப்பிலே குறிப்பிடப்படுள்ளது. அத்தோடு இக்கோயில் அமைந்துள்ள காணி குளங்கரை மருதடி எனவும் உறுதியில் கூறப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் தல விருட்சம் மருத மரம் ஆகும்.
"கங்கையார் சடையானைக் காசினியில் பூசனை செய்
மங்கையார் காமாட்சி மாதேவி மருவுமிடஞ்
செங்கையால் நாச்சிமார் சிறு விறகையொடித்தாளின்
கொங்கையாய்ந் தொளிர் வண்ணைக் குளங்கரை சார் மருதடியே"
இப்பாடல் இந்த ஆலயம் உருவான விதம் பற்றி விஸ்வகுலதிலக உயர்நீதிமன்ற நியாயதுரந்தர் விஸ்வப்பிரம்மஸ்ரீ.நமசிவாயம் சிவக்கொழுந்து ஆச்சாரியார் என்பவரால் பாடப்பெற்றது.
கர்ணபரம்பரைக் கதை
நாச்சிமார் கோவில் பற்றிய கர்ணபரம்பரைக் கதையொன்று இப்பிரதேச மக்களிடையே வழக்கில் காணப்படுகிறது.
ஆதிகாலத்தில் இப்பகுதியில் இருந்ததொரு குளத்தைச் சுற்றி நாவல் மரங்களும், மருத மரங்களும் சுற்றுப்புறங்களில் வயல்வெளிகளும் நிறைந்த மிகச்செழிப்பான பரந்த பிரதேசமாகக் காணப்பட்டது. இப்பகுதியில் தேவப்பிராமணர்களான விஸ்வப்பிரம்மகுல மக்களே மிகவும் செறிந்து வாழ்ந்தனர். இங்குள்ள பெண்கள் அருகிலுள்ள இடங்களுக்குச் சென்று விறகு சேகரிப்பது வழக்கம். இப்படியிருக்கையில் ஒருநாள் தன்னுடைய மாதவிடாய்க்காலத்தில் விறகு பொறுக்குவதற்காகச் சென்ற ஒரு கன்னிப்பெண், அப்பகுதியிலிருந்த ஒரு மருதமரத்தின் மறைவில் சென்று சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தாள். அவ்வேளையில் இந்தப் பெண், அந்த மருதமரத்திலிருந்து வந்த ஒரு தேவதை போன்ற ஒரு பெண்ணைக் கண்டதாகவும், அதேவேளையில் தன்னுடைய முலைகளை திருகுவதைப் போன்ற வேதனையையும் தான் உணர்ந்து உடனடியாக அவ்விடத்தை விட்டகன்று வீட்டிற்கு வந்து வீட்டாரிடமும், ஏனையோரிடமும் தனக்கு நடந்ததை கூறியிருக்கிறாள். இதனால் அந்தக்கிராம மக்கள் பெரிதும் பீதியடைந்தனர்.
இச்சம்பவத்தை கேள்வியுற்ற கண்ணாத்தை அம்மாள் என்னும் விஸ்வகர்மப்பிராமணகுல வயோதிப மாது மருதமரத்தடியில் கண்ட அந்தப்பெண் தெய்வத்தை சாந்தப்படுத்துவதற்காக அவ்விடத்தில் ஒரு கல்லை வைத்து விளக்கேற்றி நாச்சியார் எனப் பெயரிட்டு வழிபாடு செய்ய ஆரம்பித்தார். கண்ணாத்தையைப் பின்பற்றி அந்தக் கிராம மக்களும் நாச்சியாரை வழிபடத் தொடங்கினர். நாளடைவில் அயல் கிராமங்களிலுள்ள மக்களும் நாச்சியார் செய்யும் புதுமைகளைக் கேள்வியுற்று, இவ்விடத்திற்கு வந்து வழிபாடு செய்யத் தொடங்கினர். இவ்வழிபாட்டால் நாச்சியாரின் அருளையும் ஆசியையும் பெற்ற இம்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, அவ்விடத்தில் ஆலயமொன்றை அமைத்து, விக்கிரக வழிபாட்டை மேற்கொள்ள எண்ணினார்கள். அதன்படி அவ்விடத்தில் சிறு கோவிலொன்றைக் கல்லினால் கட்டி, அங்கு மாரியம்மனை வைத்து வழிபாடு செய்துவர ஆரம்பித்தனர். ஆலயச் சுற்றாடலிலே வாழ்ந்த ஸுபர்னஸ ரிஷி கோத்திரத்தையும் ரௌப்யாயன சூத்ரத்தையும் பிரணவவேத சாகையையும் ஈசான பிரவரத்தையும் ஸ்வர்ண யக்ஞோபவீதத்தையும் அஷ்டகோண குண்டத்தையும் பொன் தண்டத்தையும் திரிபுண்டரகந்தாஷதை கந்தத்தையுமுடைய பௌருஷேய பிராமணர்களான பொற்கொல்லர்கள், காமாட்சியைக் குலதெய்வமாக வணங்கும் வழக்கமுடையவர்களாகக் காணப்பட்டனர். எனவே, இக்கோயிலில் காமாட்சியையே வைத்து வணங்கவேண்டும் என்று கூறினர். இவர்கள் கருத்து மேலோங்கியதால், விஸ்வப்பிரம்மஸ்ரீ. பூணூல் வைத்தியலிங்கப் பத்தர் என்பவர், தென்னிந்தியாவிற்குச் சென்று காஞ்சி காமாட்சியின் திருவுருவத்தைச் செய்வித்துக் கொண்டு யாழ்ப்பாணம் வந்தார்.