மாபுராணம்
மாபுராணம் என்பது ஒரு பழந்தமிழ் இலக்கண நூல் ஆகும். இது இரண்டாம் தமிழ் சங்க காலத்தியதாகக் கருதப்படுகிறது.இது தொல்காப்பியத்திற்கு முற்பட்டது. பெருந் தொன்னூல் என்ற தமிழ்ப் பெயருக்கு மாபுராணம் என்பது வடமொழிப் பெயராகும். புராணம் என்று பெயரிட்டு செய்யுள் இலக்கணம் முதலாவதாக பல்வகை இலக்கணமும் கூறுதல் வடநூலாருக்கு உடன்பாடு. இதனை வடநூல் அக்னி புராணத்தால் அறியலாம். இம்மாபுராணம் பெரும்பான்மை வெண்பாவும், சிறுபான்மை சூத்திரமுமாக இருந்தது.
அகத்தியர் இயல், இசை, நாடகம் முதலிய எல்லாவற்றிற்கும் பரந்து விரிந்த இலக்கணம் அமைத்தார் என்றும் மாபுராணம் ஆசிரியர் அவற்றுள் ஒவ்வொரு பகுதியை எடுத்து தொகை, வகை வாரியாகக் கூறினார் என்றும் கொள்ளலாம்.
மாபுராணத்தை எழுதியவர் குறுமுனிவரின் மாணாக்கர் பன்னிருவரில் சிகண்டி என்னும் முனிவர் ஆவார். அநாகுலன் என்ற பாண்டியனுக்கும் திலோத்தமை என்ற பெண்ணுக்கும் பிறந்த சாரகுமாரன் பாண்டியன் இசையறிதல் பொருட்டு இந்நூல் இயற்றப்பட்டது.