யா/ஹாட்லிக்கல்லூரி
ஹாட்லி கல்லூரி (Hartley College) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சியில் பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள ஒரு பாடசாலையாகும். A1838 ஆம் ஆண்டில் பிரித்தானிய மெதடிச மதப்பரப்புனர்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இலங்கையில் மிகப் பழமை வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றாகும். இது வெசுலிய மதகுரு வண. மார்சல் ஹார்ட்லி என்பவரின் நினைவாக 1916 ஆம் ஆண்டில் ஹார்ட்லி கல்லூரி எனப் பெயர் பெற்றது.
1814 சூன் 29 இல் மெதடிஸ்த மதப்பரப்புனர்கள் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தனர். 1834 ஆம் ஆண்டில் வண. பீட்டர் பெர்சிவல் பாதிரியார் யாழ்ப்பாண நகரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை ஆரம்பித்தார். பின்னர் 1838 இல் பருத்தித்துறை உவெசுலியன் மிசன் மத்தியப் பாடசாலையை (Wesleyan Mission Central School) 50 மாணவர்களுடன் ஆரம்பித்தார்.
1860 ம் ஆண்டளவில் இப்பாடசாலை மூடப்பட்டு 1861ம் ஆண்டு டி.பி. நைல்ஸ் என்பவரால் திரும்பவும் ஆரம்பிக்கப்பட்டது. இது பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இருந்து இயங்கி வந்தது. நைல்சு 1861-1868ம் ஆண்டு வரை தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்குப் பின்னர் சாமுவேல் என்சுமன் என்பவர் தலைமை ஆசிரியரானார். 1874 ஆம் ஆண்டில் தற்போதைய இடத்தில் இருந்து இயங்க ஆரம்பித்து வளர்ச்சி பெறத் தொடங்கியது.இதன் இப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக தாமோதிரம்பிள்ளை செரட் நியமிக்கப்பட்டார். 1912 ஆம் ஆண்டில் இப்பாடசாலை Christ Church School எனப் பெயர் மாற்றப்பட்டது. 1916 ஆம் ஆண்டில் வண. மார்சல் ஹார்ட்லி என்பவர் இக்கல்லூரியில் வேதியியல் ஆய்வுகூடத்திற்கு அடிக்கல் நாட்டிச் சென்றார். இதனால் இக்கல்லூரி “ஹார்ட்லிக் கல்லூரி” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[5] தாமோதிரம்பிள்ளை 28 ஆண்டுகள் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். 1943 இல் கே. பூரணம்பிள்ளை தலைமையாசிரியரானார்.
1960களில் அனேகமான தனியார் பாடசாலைகள் அரசுடைமையாக்கப்பட்டதை அடுத்து ஹார்ட்லி கல்லூரியும் 1960 டிசம்பர் 1 இல் அரசு உதவி பெறும் பாடசாலையானது.ஈழப்போர்க் காலத்தில் 1985 முதல் 1990 வரை புத்தளையில் இருந்து இயங்கியது. 1989 இல் இக்கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்று வெளியிடப்பட்டது.[3] 1996 முதல் 2002 வரை இப்பாடசாலையின் பெரும்பாலான பக்திகளை இராணுவத்தினர் தமது தேவைக்காகப் பயன்படுத்தி வந்தனர். பாடசாலை அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடக்கப்பட்டது.
இங்கே இலங்கையின் பல பிரபலங்கள் கல்விகற்றமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக முன்னாள் சபாநாயகர் கே.பி.ரத்னாயக்கா இங்கே கல்விகற்றார். இப்பாடசாலைக்கு கொழும்பு உட்பட இலங்கையின் பல பிரதேசங்களில் பழைய மாணவர் சங்கம் இருக்கின்றது.1989 இல் கல்லூரியின் 150 ஆண்டு நிறைவைக் கொண்டாடுமுகமாக இலங்கை அரசு முத்திரை வெளியிட்டுக் கௌரவித்தது. 1998 இல் கல்லூரி இணையத்தளம் ஒட்டாவா, கனடாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
நோக்கக் கூற்று
நவீன உலகிற்குத் தேவையான ஆற்றல்களையும் திறன்களையும் மாணவர்க்கு அளித்துக் கல்வி, ஒழுக்க, சமய, இனப் பண்பாட்டு மரபுகளைப் பேணுகின்ற இலட்சிய சீலர்களை வளர்த்துத் தனக்கும் சமூகத்திற்கும் ஆளுமை பொருந்திய நற்பிரசைகளாக உருவாக்குவோம்.
மாணவர்களுக்கான பணிக்கூற்று
எமது தோழமையான திறன்மிகு ஊக்கங்கொண்ட ஆசிரிய குழுமத்தினர் ஊடாகப் புரிதலும் சவாலும் நிறைந்த கல்வியை வழங்கி மாணவர்களின் தேவையை நிவர்த்தி செய்தல்.
ஆசிரியர்களுக்கான பணிக்கூற்று
மீயுயர் பெறுமானமுள்ள கற்பித்தற் பணியினை முன்னெடுக்கும் ஆசிரியர்களை இனங்கண்டு அவர்களுக்கான வெகுமதிகளை வழங்கும் சமதருணத்தில் அவர்களின் தனிநபர் மேம்பாட்டுக்கான சந்தர்ப்பங்களையும் நல்கி, கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் இலட்சியத்தோடு இணங்குநராக்கி, கல்லூரியின் விருத்திக்கு உழைக்கும் ஆசிரியர்களோடு நட்போடு இருத்தல்.
சமூகத்திற்கான பணிக்கூற்று
இந்தப் பிரதேசத்தின் சமூக பொருளாதார,சூழல், கல்வி, கலாசார மேம்பாட்டுக்கான பங்குதாரர்களாக இருத்தல்.
மகுடவாசகம்
"ஒளிபரவட்டும்"