மணிமேகலை

இந்திர விழா 

நாவலந் தீவிலுள்ள மாந்தர் எல்லாம் பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத் தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் என்று சாத்தனார் கூறுகின்றார்.

விழா வரலாறு

பழம் பெருமையும் சிறப்பும் வாய்ந்தது புகார் நகரமாகும். ஒழுக்கங்களில் சிறந்து விளங்கிய மக்கள் பலரும் அந்நகரைப் போற்றுவர். பழஞ்சிறப்பு வாய்ந்த நகரின் புகழ் மேலும் சிறப்புற வேண்டும் என்று அருந்தவ முனிவர் அகத்தியர் நினைத்தார். அப்புகார் நகர் மேலும் வளமுடன் பொலிவடைய வேண்டுமானால் தேவர் தலைவனாகிய இந்திரனுக்கு இருபத்தெட்டு நாட்கள் விழா எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அப்போது புகார் நகரில் இருந்து ஆட்சி செய்த மன்னன் தூங்கு எயில்கள் எனப்படும் தொங்கும் கோட்டைகளை அழித்தவனாகிய தொடித்தோட் செம்பியன் ஆவான். அவனிடம் இக்கருத்தைத் தெரிவிக்க, உடனே இசைவு அளித்து, விழா சிறப்புடன் நடைபெற ஏற்பாடு செய்தான். செம்பியன் வேண்டுகோளை ஏற்று இவ்விழாவில் தேவர் தலைவனாகிய இந்திரனும், மற்றுமுள்ள தேவர்களும் விழாத் தொடங்கிய இருபத்தெட்டு நாட்களிலும் புகார் நகரத்திலே வந்து தங்கியிருந்தனர்.

கேள்வி ஞானம் உடைய சான்றோர்கள் இத்தகு உயர்வு மிக்க இந்த இந்திர விழாவினைக் கொண்டாடுதலை ஒரு போதும் தவறவிட மாட்டார்கள். காவிரிப் பூம்பட்டினத்திற்குப் பூம்புகார் என்ற மற்றொரு பெயரும் உண்டு. புகார் நகரம் இன்று பூம்புகார் என்னும் பெயரில் வழங்கப்படுகிறது. விழாவறை காதைப் பகுதியால் இந்திர விழா தொடங்கிய முறையையும், சோழ மன்னனின் அருஞ் செயலும் ஆற்றலும் வியந்து போற்றப்படும் செய்தியையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இந்திர விழாவினை இருபத்தெட்டு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடும் மரபு இருந்துள்ளமையை உணர முடிகின்றது.

விழா நடத்த முடிவு செய்தல்

 

இந்திர விழாவினை நடத்த வேண்டும் என்பதற்காக அரசவையில் கூடியவர்கள்: இம்மை, மறுமைப் பயன்களை உணர்ந்தவரும் நால்வகை உறுதிப் பொருள்களின் உண்மை அறிந்த வரும் ஆன சமயக் கணக்கர், காலம் கணிக்கும் சோதிடர், தம் தேவ உருவினை மறைத்து மனித உருவம் கொண்ட கடவுளர்கள் (தேவர்கள்), பன்மொழி பேசும் வேற்று நாட்டினர், ஐம்பெருங் குழுவினர், எண் பேராயத்தினர் ஆகியோர் ஒன்று கூடி விழா நடத்த முடிவு செய்தனர்.

சமயக் கணக்கரும்;தந்துறை போகிய

அமயக் கணக்கரும்; அகலாராகிக்

கரந்துரு எய்திய கடவுளாளரும் (13-16)

(சமயக் கணக்கர் = சமயவாதிகள்: அமயக் கணக்கர் = காலம் கூறும் சோதிடர்; கரந்துரு எய்திய = உண்மை உருவத்தை மறைத்த.)

ஐம்பெருங் குழு : அமைச்சர், புரோகிதர், சேனாதிபதியர், தூதுவர், சாரணர் ஆகிய ஐவரைக் கொண்ட குழு.

எண்பேராயம் : கரணத்து இயலவர், கரும விதிகள், கனகச் சுற்றம், கடைக் காப்பாளர், நகர மாந்தர், நளிபடைத் தலைவர், யானை வீரர், இவுளி மறவர் எனப்படும் எண்மரைக் கொண்ட குழு. ஐம்பெருங் குழுவினரும், எண்பேராயத்தினரும் அரசனுக்குரிய பணிகளை நிறைவேற்றக் கூடியவர்கள்.

காதையின் இப்பகுதி, பல்வேறுபட்ட மக்கள் கூடியிருத்தலைக் காட்டுகிறது. அக்காலத்தில் சமயப் பூசல் இல்லாமல் மக்கள் சமயப் பொறை (Religious Tolerance) காத்தனர். என்பதனை இதனால் நன்கு உணர முடிகின்றது. பண்டைக் காலத்தில் ஊர்ப் பொதுக் காரியங்களை நகர் மக்களும் சான்றோரும், அரசனுடைய பணிகளைச் செய்யும் ஐம்பெருங் குழுவினரும், எண்பேராயத்தினரும், பலமொழி பேசுபவர்களும், ஒருங்கு குழுமியே எண்ணித் துணியும் வழக்கம் இருந்தமையை அறிய முடிகிறது. இச்செயல் அக்காலத்து நாகரிகச் சிறப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது.

விழாத் தொடக்கம்

இவ்விழாவினை வழக்கம்போல் நடத்தாவிடில் புகார் நகருக்கும், மக்களுக்கும் துன்பம் வந்து சேரும். கொடி பறக்கும் தேரினையும், படைப் பெருக்கத்தினையும் கொண்ட கொற்றவனாகிய முசுகுந்த மன்னனுக்கு முன்னாள் ஏற்பட்ட துயரத்தினைப் போக்கியது இப்புகார் நகரத்து நாளங்காடி (பகல் நேரக் கடைத்தெரு)ப் பூதம். அப்பூதம் தனக்கு விழாவினை வழக்கம்போல் எடுக்காவிட்டால், சிவந்த வாயினை மடித்துத் தன் வலிமையான பற்கள் வெளித்தோன்ற, இடியின் முழக்கம் போன்று குரலெடுத்து முழக்கமிட்டு, மக்களுக்கும், புகார் நகருக்கும் துன்பத்தைச் செய்துவிடும் என்று சான்றோர்கள் கூறினர். மேலும், பாவிகளைப் பாசத்தால் (கயிற்றினால்) பிடித்து உண்ணும் சதுக்கப் பூதமும் இப்புகார் நகரை விட்டு நீங்கி விடும். ஆதலினால் இந்த மிகப்பெரிய உலகத்தில் உள்ள அரசர்கள் பலரும் ஒருங்கே வந்து கூடுகின்ற இந்திர விழாவுக்கான, கால்கோள் விழாவினைச் (தொடக்க விழா) செய்யுங்கள் என்றனர் சமய வாதிகள்.

மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும்

ஆயிரங் கண்ணோன் விழாக்கால் கொள்க

அடிகள் 25-26)

ஆயிரங்கண்ணோன் = இந்திரன்)

இப்பகுதியால் இந்திர விழாவை மறந்து கைவிடத் தகுந்த சூழ்நிலை அந்நகரத்தில் இருந்தமையை உணர முடிகிறது. புகார் நகரத்திற்கு ஏற்படும் துன்பத்தினைத் தடுக்கவும், நகரம் வளமடையவும், இந்திர விழாவை வழக்கம்போல் கொண்டாட வேண்டும் என்னும் செய்தி வெளிப்படுகின்றது. மேலும், உலகிலுள்ள அரசர்கள் முதலாக அனைவரும் வந்து கொண்டாடும் விழா என்பது உணர்த்தப்படுகிறது.