ஆற்றுப்படை இலக்கியம்
தமிழ் மொழியின் மிகப் பழமையான இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் என்பதை அறிவீர்கள். உலகின் மிகப் பழமையான இலக்கியங்கள் எனவும் இவை கருதப்படுகின்றன. மக்கள் வாழ்வை அகத்திணை, புறத்திணை என்னும் இருவகை ஒழுக்கங்களாகப் பகுத்து, இவைதாம் இலக்கியமாகப் படைப்பதற்கு உரிய பொருள்கள் என்று வகுத்துள்ள தமிழரின் மரபு பற்றியும் அறிந்துள்ளீர்கள். ஏழு புறத்திணைகளில் மிகச் சிறந்தது பாடாண்திணை என்பதைச் சங்க இலக்கியத்தை ஆழ்ந்து கற்றால் அறிவீர்கள். இதுதான் ஒரு மனிதனின் தலைமைப் பண்புகளின் உயர்வைப்பாடுகிறது. அறிவு, ஆற்றல், தன்னலம் இல்லாத ஈகைப் பண்பு, அருள் ஆகிய நல்ல இயல்புகள் அனைத்தும் கொண்டவன்தான் மனிதருள் உயர்ந்த தலைமகன் ஆவான். ஒருவனிடம் இருக்கும் இவற்றை ஆராய்ந்து பாராட்டிப் புகழ்வது அவனை மேலும் உயர்த்தும்.
அவனைப் பின்பற்றும் மக்களிடையே அவனது ஆளுமை பரவி அவர்களையும் உயர்த்தும். இவர்களைக் கொண்ட சமுதாயம் முழுதும் உயர்ந்த பண்புகளால் சிறக்கும். எனவே, பண்புகளின் உயர்வைப் பாடும் பாடாண் திணையே மிக உயர்ந்தது. பாடாண்திணை பல துறைகளைக் கொண்டது. அவற்றுள் ஆற்றுப்படை என்பது ஒரு துறை ஆகும். தொகை நூல் ஆகிய புறநானூற்றில் பல சிறு பாடல்களாக இத்துறை பாடப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்திலும் சில பாடல்கள் ஆற்றுப்படையாக அமைந்துள்ளன. நீண்ட பாட்டுகளான பத்துப்பாட்டில் சரி பாதி ஆன ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படை இலக்கியங்கள் ஆகும். இத்தகைய சிறந்த இலக்கியம் பற்றி இப்பாடம் விளக்கிக் கூறுகிறது.
ஆற்றுப்படை இலக்கியம்
புலவர்களும் கலைஞர்களும் புலன்களாகிய அறிவில் அழுக்கு இல்லாத சான்றோர்கள் ஆவர். அவர்களது வாழ்க்கை குறித்துப் புறநானூறு பற்றிய பாடத்தில் மேலும் அறிந்து கொள்வீர்கள். அவர்கள் பண்புகளால் உயர்ந்தவர்களை மட்டுமே பாராட்டிப்பாடுவார்கள். தங்கள் பாட்டுக் கலைத்திறனைப் பாராட்டி அந்த வள்ளல்கள் தரும் பரிசில் பொருள்களைப் பெற்று, அவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்து வாழ்வார்கள். அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லை என்றாலும் தகுதி இல்லாதவர்களைப் பற்றிப் பொய்யாகப் புனைந்து பாட மாட்டார்கள். பாடப் படுவதற்கு உரிய தகுதி கொண்ட செல்வர்கள் இருக்கும் இடம் தேடி , பழுத்த மரத்தைத் தேடிச்செல்லும் பறவைகள் போலப் பல நூறு கல் தொலைவு, காட்டையும் மலையையும் கூடத் தாண்டிச் செல்வார்கள். அவ்வாறு சென்று பலவகைச் செல்வங்களையும் பரிசாகப் பெற்றுத் திரும்பும் ஒரு கலைஞன் எப்படி இருப்பான்? ஒரு சிற்றரசனிடம் படைகளோடு சென்று அவன் செலுத்த வேண்டிய வரியைப் (இது திறை அல்லது கப்பம் எனப்படும்) பெற்றுக் கொண்டு திரும்பும் பெரிய மன்னனைப் போல் காட்சி அளிப்பான்.
பரிசில் பெற்று வருபவன், இன்னும் பெறாதவன் இருவரையும் ஒப்பிட்டால், எல்லா வகையிலும் சமமான கலைஞர்கள்தாம். ஆனால் ஒரே ஒரு வகையில் இருவரும் ஒப்பிடவே முடியாத நிலையில் வேறுபடுகிறார்கள். அது எது? ஒருவன் செல்வச் செழுமையின் உச்சத்தில் இருக்கிறான். மற்றவனோ வறுமையின் அடி ஆழத்தில் கிடக்கிறான். பரிசில் பெற்ற கலைஞன் வறுமையில் இருக்கும் கலைஞனிடம் தானே வருகிறான். அவன் மீது பரிவோடு பேசுகிறான். தன் கலைத் திறனைப் பாராட்டிப் பரிசு வழங்கிய வள்ளலின் கொடைத்திறனைப் புகழ்கிறான்; அவன் தகுதிகளை விரித்துக் கூறுகிறான். அவனிடம் சென்றால் வறுமை தீரும் என்று நம்பிக்கை ஊட்டுகிறான். அவனிடம் செல்வதற்கு வழியை விரிவாகக் கூறி வாழ்த்தி அனுப்புகிறான். எனவே, கலைஞர்களுக்கு உதவும் வள்ளல்களை வாழ்த்திப் புகழ்பெறச் செய்யும் கலைஞர்கள், தாங்களும் வள்ளல்களாய் இருக்கின்றனர். இதை ஆற்றுப்படை இலக்கியம் உணர்த்துகிறது. பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், இந்தப் பண்பாடு மிக்க செயலைப் புலவர்கள் பாடாண் திணையின் ஒரு துறையாகப் பாடி இருப்பதைக் காட்டுகிறார். இதுவே ஆற்றுப்படை ஆகும். ஆறு என்றால் பாதை, வழி என்று பொருள். படை என்றால் படுத்துவது - அனுப்பிவைப்பது என்று பொருள்.
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்
(தொல். பு.இ. 88: 3-6)
(கூத்தர் = நாடகக் கலைஞர்; பாணர் = இசைக்கலைஞர்; பொருநர் = பாடலிலும் நடித்தலிலும் வல்லவர், போர்க்களத்தைச் சிறப்பித்துப் பாடுபவர்; விறலி = ஆடல், பாடல், நடித்தல் கலைகளில் வல்ல பெண்; உறழ்தல் = மாறுபடுதல்; காட்சி உறழத் தோன்றல் = செல்வ நிலையில் ஏற்றத் தாழ்வு பார்த்த உடனே புலப்படும் வண்ணம் ஒருவர்க்கு ஒருவர் வேறுபட்ட தோற்றத்துடன் காட்சி அளித்தல்; அறிவுறீஇ = விளக்கிச் சொல்லி; பயன்எதிர = வளங்களை அடைய)
பண்பாட்டு இலக்கியம்
புதையல் இருக்கும் இடம் தனக்குத் தெரிந்ததும், அதைத் தன் உடன் பிறந்தவனிடம்கூடச் சொல்லாமல் மறைத்து வைப்பவர்களைப் பற்றிய எத்தனையோ பிற நாட்டுக் கதைகள் படித்திருப்பீர்கள். ஆனால், தன்னை ஒத்த கலைஞனிடம் பொறாமை கொள்ளாமல், அன்பு கொண்டு தானாகவே சென்று செல்வப் பரிசு கிடைக்கும் இடத்தைக் கூறி, போக வழியும் சொல்லும் இந்தக் கலைஞர்களின் பண்பாட்டைப் பாருங்கள்! தான் பெற்ற செல்வத்தை அடுத்தவரின் பசி தீர்க்கக் கொடுத்து உதவும் ஈகை என்பதே மக்கள் பண்பில் உயர்ந்த பண்பு. இதனால் கிடைக்கும் இன்பமும் புகழும் தாம் இந்த உலகில் வாழும் உயிர்பெறும் ஊதியம் (சம்பளம்) என்று திருவள்ளுவர் கூறியுள்ளார் அல்லவா? மன்னர்களிடமும், பெரிய செல்வர்களிடமும் பரிசு பெற்று வாழும் புலவர்களிடமும் கலைஞர்களிடமும் இந்தப் பண்புமிக ஓங்கி நிற்பதை ஆற்றுப்படை காட்டுகிறது என்பதை உணர்கிறீர்களா? இவர்கள் வள்ளல்களைவிட ஒருவகையில் மேலும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் எழுகிறதா? “பசித்தவனுக்கு உணவை வழங்குவதை விட, அதை உருவாக்கிக் கொள்ளும் வழியை அவனுக்குச் சொல்லிக் கொடுப்பதே சிறந்த அறம்” என்னும் மேல்நாட்டுப் பொன்மொழியையும் நினைத்துப் பாருங்கள்.
புறநானூற்றில் ஆற்றுப்படை
புறத்திணை பற்றிய சிறந்த பாடல்களின் தொகுப்பான புறநானூறு பற்றி விரிவாக அடுத்த பாடத்தில் படிப்பீர்கள். இதில் ஆற்றுப்படைத் துறையில் அமைந்த சிறு பாடல்கள் பல உள்ளன. புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ள முதல் ஆற்றுப்படைப் பாடல் புலவர் ஆற்றுப்படையாக அமைந்துள்ளது. புலவர் பொய்கையார் ஒரு வறுமையுற்ற புலவனைச் சேரமான் கோக்கோதை மார்பனிடம் ஆற்றுப்படுத்திப் பாடி உள்ளார்.
கோதை மார்பின் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள்நா றும்மே கானல்அம் தொண்டி
அஃதுஎம் ஊரே அவன்எம் இறைவன்... (புற. 48: 1-5)
(கோதை = சேரமன்னனின் பெயர், பூமாலை; மாக்கழி = கருநீல நிறம் கொண்ட கடற்கரை நீர்நிலை ; கள் நாறும் = தேன் மணக்கும்; கானல் = கடற்கரைச் சோலை; இறைவன் = மன்னன்)
இவ்வாறு சேர மன்னனையும் அவனது தலைநகர் தொண்டியையும் அறிமுகம் செய்கிறார் புலவர். "தொண்டி தேனின் மணம் கமழும் ஊர். அதுவே எங்கள் ஊர். அவன்தான் எங்கள் அரசன். அவனிடம் நீ சென்றால் அவன் தரும் செல்வங்களைப் பெற்று நீ உன் வறுமையையும், அந்த வறுமை மிக்க கடந்த காலத்தையும் மறந்துபோவாய். அவற்றை மட்டும் அல்ல. வழிகாட்டிய என்னையும் கூட மறந்துவிடுவாய். அதனால் கோதையிடம், "போரில் வென்று வாள் வன்மையால் நீ ஓங்கி நிற்கும் போது தன் வாய் வன்மையால் உன் புகழை ஓங்கச் செய்யும் புலவரைக் கண்டேன்'' என்று, என்னை நினைத்துப் பார்த்துச் சொல்” என்று பாடுகிறார் பொய்கையார். இப்பாடலில், தொண்டியில் தேன் மணம் கமழ்வதற்குக் காரணம் சொல்கிறார். கோதை என்ற சொல் சேரமன்னன் பெயரைக் குறிக்கும். பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையையும் குறிக்கும். இந்தச் சொல் மீண்டும் மீண்டும் வரும் வகையில் அழகாகச் சொற்களைத் தொடுத்துள்ளார் புலவர். கோதை மார்பில் அணிந்துள்ள மாலையின் மலர்கள்; அவனைத் தழுவிய மகளிர் கூந்தலில் சூடிய மாலையின் மலர்கள், கரிய நிறம் கொண்ட கடற்கரைப் பொய்கையில் மலர்ந்துள்ள நெய்தல் மலர்கள் இவற்றில் உள்ள தேனால் தொண்டி என்ற ஊரே தேன் மணக்கிறதாம்.
வறுமையில் வாடி வள்ளலைத் தேடி வறண்ட நிலத்தைத் தாண்டிச் செல்கிறான், இந்தப் புலவன். இவனுக்குத் தேன் மணத்தால் இனிமையான வரவேற்புத் தருகிறது சேரனின் ஊர். இனிய முகம் காட்டி விருந்தினரை ஓம்பும் வள்ளலின் இயல்பை ஊரின் மேல் ஏற்றி, அங்கு எங்கும் இனிமை, எல்லாம் இனிமை என்று பொய்கையார் உணர்த்துகிறார் இல்லையா? கடற்கரையில் உள்ள ஊர் அது. அதில் புலால் நாற்றமாகிய மீன் மணம்தான் இருக்கும். ஆனால், அதை மீறிப் பூ மணம் ஆன தேன் மணம் எழுகிறது என்று புலவர் பாடுகிறார். இதில் ஏதோ ஒரு குறிப்புப் பொருள் இருக்கிறது என்று தோன்றுகிறது அல்லவா? என்ன அது? எண்ணிப் பார்ப்போமா? சேரமான் வீரத்தில் சிறந்தவன். அதையும் விஞ்சுகின்ற வகையில் ஈகைப் பண்பில் மிகவும் சிறந்தவன். இதையே மீன் மணமும் அதை விஞ்சி எழுகின்ற தேன் மணமும் குறிப்பாகச் சுட்டுகின்றன. எப்படி? இரத்தமும் சதையும் நாறும் போர்க்களத்தில் சிறப்பது வீரம். இதைப் புலால் நாற்றமான 'மீன் மணம் குறிக்கிறது. பூப்போன்ற மெல்லிய நெஞ்சத்தில் ஊறும் தேன் போன்றது அருள். எப்போதும் புகழ் மணமும் இனிமையும் கொண்ட இந்த ஈகைப் பண்பைத் தேன்மணம்” குறிக்கிறது.