கம்பராமாயணம்

தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் காப்பிய நூல்களுள் ஒன்று இராமாயணம். இந்நூலின் ஆசிரியர் கம்பர். சமயக் காப்பியங்களுள் இது வைணவ சமயத்தைச் சார்ந்தது. இந்தக் காப்பியம் தோன்றிய காலம் இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆண்ட, கி.பி. 12-ஆம் நூற்றாண்டாகும். சிலர் ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் கூறுவர். சோழ நாட்டில் திருவழுந்தூரில் உவச்சர் மரபில் தோன்றிய கம்பரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் ஆவார். வான்மீகி முனிவர் வடமொழியில் இராமாயணத்தை இயற்றினார். அதனை, தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்ப ஈடும் இணையும் இல்லாமல் கம்பர் தமிழில் தந்த காவியமே இராமாயணமாகும். கம்பர், தம் நூலுக்கு இராமாவதாரம் என்று பெயரிட்டார்.

இக்காப்பியம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டது. இந்த ஆறு காண்டங்களின் சிறு பிரிவுகளாக 113 படலங்கள் உள்ளன. மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 10,500 ஆகும்.

(காண்டம் - பெரும்பிரிவு; படலம் - சிறுபிரிவு.)

இக்காப்பியத்தின் கதை இராமனின் வரலாற்றைப் பற்றித் தெரிவிப்பதால் இராமாயணம் எனப்பட்டது. கம்பர் எழுதியதால் கம்ப இராமாயணம் எனப்பட்டது. இராம + அயணம் என்ற வடமொழிச் சொற்கள் இணைந்து இராமாயணம் என்றாயிற்று.

அடிப்படையில் அறமும், சமயமும் காப்பியத்தின் பொருளாக அமைகின்றன. மனிதர் யாவருக்கும் பயன் தரும் ஒழுக்க முறைகளையும் பண்பாட்டினையும் குறிக்கோளினையும் ஆட்சிச் சிறப்பினையும் விளக்கும் அருமையான இலக்கியமாகத் திகழும் சிறப்புடையது கம்பராமாயணமாகும்.

மிகுதி அடுத்த வாரம்..